மின்வெ(வே)ட்டு

“ ஆறு மணியாச்சா? கரண்டு போயிடும் என்கிற வசனத்தைத் தொடர்ந்து, மின்வெட்டு ஏற்படுவதுபோன்றும், பின்னர் கலைஞர் ஆட்சியில் இதுதான் நடக்கும் என்று சொல்வது போன்றும் சித்தரிக்கப்பட்டிருந்த ஒரு விளம்பரம் கடந்து போன தேர்தலோடு அம்மையாருக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் பார்த்த மாதிரி நினைவு. அப்போதாவது இந்நேரத்திற்கு தான் மின்வெட்டு என்ற வரைமுறையிருந்தது. இப்போதெல்லாம் எந்நேரத்திற்கு மின்சாரம் வரும் என ஏங்க வேண்டியிருக்கிறது.

31/10/2012 அன்று சட்டப் பேரவையில் நிகழ்த்திய உரையில் “மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கான நிர்வாகத் திறமைதான் இல்லை. நீண்ட கால அடிப்படையிலாவது மின்சாரத்தைக் கொள்முதல் செய்திருக்கலாம். அதாவது CASE – 1 என்கிற அடிப்படையிலாவது ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருக்கலாம். அதையும் முந்தைய மைனாரிட்டி திமுக அரசு செய்யவில்லை. மாறாக, குறுகிய கால அடிப்படையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்தார்கள்.அதாவது, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டது. இதன் காரணமாக மின்சார வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மை நிலை என்னவென்றால், இரு கட்சிகளுமே தத்தம் ஆட்சிகளில் அயல் நாட்டு நிறுவனங்களுக்கு தமிழ் நாட்டில் நுழைய போட்டி போட்டுக் கொண்டு அனுமதியை வாரி வழங்கின. மேலும், இந்நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தின்போதே மின்சாரமும், தண்ணீரும் தங்குதடையின்றி வழங்குவதாய்க் கையொப்பமிட்டிருக்கின்றன. இன்றளவும் தமிழகத்திற்கு ஆட்சிக்கு வரும் எந்த அரசாக இருந்தாலும் அயல் நாட்டு நிறுவனங்களுக்கு விசுவாசமாகவே இருந்து வருகின்றன.

அண்மையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருக்கழுக்குன்றத்திற்கும், திருச்செந்தூருக்கும் சொந்த வேலையாகச் சென்று வந்தேன். நிலைமை படு மோசமாக இருக்கிறது. பகலில் மின்சாரம் என்பது நினைத்துப் பார்க்கவே முடியாததாகவும், இரவில் நான்கைந்து மணிநேரங்கள் மட்டுமே வந்து போவதாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு இதுதான் நிலை என்பது கொடுமையானது. இந்தப் பகுதிகளிலிருக்கும் கைக்குழந்தைகள் இப்போதே மின்வெட்டிற்குப் பழகிவிட்டன என்பது நிதர்சனமான உண்மை.

* மொத்தமாக தமிழகத்திற்கு உபயோகப்படுத்தப்படும் மின்சாரத்தில் 25 விழுக்காடு சென்னைக்கு மட்டும் செலவாகிறது. ஆனால், சென்னையில் மட்டும்தான் மின்வெட்டு ஏற்படும் நேரம் மிகக்குறைவு.

* விவசாயத்திற்கும், ஆடை நெய்வதற்கும் மற்றும் சில அத்தியாவசியமான தேவைகளுக்கும் நவீன கருவிகளைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கக் கற்றுக்கொண்டோம். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என தொடர்ந்து கொண்டிருந்த நாம், மின்வெட்டால் உற்பத்தியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

* அடிப்படைத் தேவைகளுக்காக ஒதுக்கப்படாத மின்சாரம் அயல் நாட்டு நிறுவனங்களுக்காய் ஒதுக்கப்படுவது எள்ளளவும் ஏற்றுக் கொள்ள முடியாததல்லவோ.

* இலவச மின்சாதனங்கள் வழங்கி, மின்சாரத்தின் பயன்பாட்டினை அதிகரித்துவிட்டு, இப்போது மின்சாரம் போதவில்லை என அங்கலாய்ப்பது முறையா? தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் படிப்பறிவற்ற பாமரனுக்குக் கூட இதை யோசிக்கத் தெரியுமே. என்றால், மடிக்கணிணி வேண்டுமென்று ஒரு நேரம் கொடிபிடித்த பட்டதாரிகள் செய்ததும் கூட முறையல்லவே.

* இதற்கிடையே, காற்றாலை உற்பத்தியை தற்காலிகமாய் நிறுத்தி வைத்து, கூடங்குளம் விவகாரத்திற்கும் முடிவு காணாமல், மின்வெட்டைத் தீர்க்க என்னதான் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்களோ?

* எரிகிற வீட்டில் பிடுங்கினது மிச்சம் என்பது போல, நமக்கிருக்கும் மின்பற்றாக்குறையை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளும் ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டுதானிருக்கின்றன.

எந்த அரசு மின்வெட்டு ஏற்படக் காரணம் என்பதெல்லாம் எமக்குத் தேவையில்லை. முந்தைய அரசைக் குறை கூறுவதாயிருந்தால் அதை நாமே செய்வோம். முந்தைய அரசின் குறைகளைப் பட்டியலிடுவதற்காய் ஒன்றும் நாம் அம்மையாருக்கு ஆட்சிப் பொறுப்பினை அளிக்கவில்லை. இதை எப்போதுதான் அரசு புரிந்து கொண்டு, மின்வெ(வே)ட்டைத் தீர்க்குமோ?

Advertisements