காதல் படுத்தும் பாடு…

 

எதுகையும் மோனையும்

எதுவெனத் திணறுகையில் உன்

மௌனப் புன்னகையால்

மோகனமாய்ச் சொன்னது நீ…

என் வார்த்தைகளை

உறையச் செய்து

விரல்களுக்குப் பேசும்

வரம் கொடுத்தது நீ…

நீ கொடுத்துப்போன

தன்னம்பிக்கை விதைகளில்

வளரப்போவது நம்பிக்கை மட்டுமல்ல

நம் காதலும் தான்…

எதுவென எனக்குப் புரிந்திடாத

என் காதல் குழந்தைக்கு

அழவும் ஆழ யோசிக்கவும்

கற்றுக் கொடுத்தது நீ… 

நீ விலகுகிற நேரங்களில்

அருகாமைக்காய் ஏங்கி அழுவதும்

நெருங்குகிற நேரங்களில்

விலக எத்தனிப்பதுவுமாய்…

ஆற்றொணாத் துயரத்தையும்

சொல்லொணா ஆனந்தத்தையும்

ஒருங்கேயளித்து உன்னை மறைத்து

மிகையாய்ப் படுத்துகிறது இந்தக் காதல்…

Advertisements