பழமை(வாதி)யின் காதல்

கருவினின்று வெளியேறத்துடிக்கும்

கருவாய் உன்னைக் காண

துடிதுடிக்கும் நான் – ஒரு

பழைமைவாதியைப் போல்….

 

 

 

மதிப்புக்கூட்டப்பட்ட

அங்கிகளால் குவிக்கப்பட்டிருந்தும்

உன் கைக்குட்டையின் ஈரத்திற்காய்

ஏங்கி நகரும்  என் நாட்கள்…

 

வயிறுமுட்ட மதுவுண்ட

பின்னும்கூட நகர யோசிக்கும்

வண்டுக்கூட்டங்களினூடே

நானும் சேர்ந்துவிட்ட மயக்கம்….

 

நாங்கள் நகருக்குப் புலம்பெயர்ந்த

நாட்களில் உன் விழிகளினின்று

வழிந்திருந்த ஈரம் இன்றும்

என் நினைவுகளில் பசுமையாய்…

 

“சாப்பிட்டுப் போயேண்டா”

அம்மா கடிந்துகொள்ளும்

பொழுதுகளிலெல்லாம் வீசும் உன்

கூட்டாஞ்சோறு வாசம் என் நெஞ்சில்…

 

அலுவலினூடான விடுமுறையின்

வாசத்தில் நம் கிராமத்து மண்ணும் 

பசுமையும் மாறாமலிருப்பதைக் கண்டு 

குதூகலிக்கும் என் மனது….

 

பூனைநடை பயிலும் புதுமைப்

பெண்களைக் காணும்

கணங்களிலெல்லாம் என் கண்களினூடே

தோன்றி மறையும் உன் பிம்பம்…

 

 

திருநீற்றுக் கீற்றை மறைக்கும்

நெற்றிமுடிக் கீற்றும்

வண்ணத் தாவணியுமாய்

கொஞ்சம் மெருகேறித்தானிருக்கிறாய்…

 

ஆறு வயதில் உனை விட்டுச் சென்று

இந்த இருபது வருடங்களாய்

காணக்கிடைக்காத உன்

வெட்கப் புன்னகைக்கான என் காத்திருப்பு…

 

என் காதலும் காதல் நிமித்தமும்,

பழைமை மாறா மலராய் உனைக் 

கண்டதும் புல்லரித்துப் போகிறேன் 

இதற்காகத்தானே புலம்பெயர்ந்தேன் –  த னி ய னா ய் . . .

8 thoughts on “பழமை(வாதி)யின் காதல்

  1. அன்புள்ள கெளரி லக்ஷ்மி [நுண்மதி],

    அழகான கவிதை. அருமையான படங்கள்.

    /திருநீற்றுக் கீற்றை மறைக்கும்
    நெற்றிமுடிக் கீற்றும்
    வண்ணத் தாவணியுமாய்/ ;)))))

    அந்தப் பச்சைப் பட்டுப் பாவாடை சட்டை,
    சிவப்புத்தாவணி,
    அழுந்த சமத்தாக பேசும் விழிகள்,
    காது ஜிமிக்கி,
    கூந்தலை நேர்த்தியாகவாரி,
    பின்னலை முன்பக்கமாகப் போட்டு
    அமைதியாக அமர்ந்துள்ள பெண்ணின் படத்தேர்வு சூப்பர்.

    கவிதையின் எண்ணங்களை நேரில் பேசுவது போல
    ஒரு ஜோடி காதல் கிளிகள்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள். vgk

  2. அருமையான கவிதை. அனைத்து வரிகளையும் ரசித்துப் படித்தேன் நுண்மதி (இளையராஜாவின் ஒவியத்தையும் கூட). வலைச்சரம் எனக்குத் தந்த நல்லறிமுகம் நீங்கள். (ஆனால் கடைசி இடுகை என வலைச்சரத்தில் குறிப்பிடாமல் அண்மைய இடுகை என்று குறிப்பிட்டிருக்கு வேண்டும் நீங்க.ள)

நுண்மதி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி