கொலைவெறி – வாழுமா தமிழ்?

“புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்”

என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

– மகாகவி பாரதி.

“மெல்லத் தமிழினிச் சாகும்” என பாரதியாரால் சொல்லப்பட்டது என்கிறவர்கள் தயவு செய்து முதல் வரியில் தொடங்கி, எட்டாவது வ்ரியில் முடிந்திருக்கும் இரட்டை மேற்கோள் குறியை கவனியுங்கள். பின்பு கடைசி நான்கு வரிகளைப் படியுங்கள். உண்மை நிலை விளங்கும்.

மேன்மைக் கலைகளைச் சொல்லுந்திறமை தமிழ் மொழிக்கில்லை என நினைத்து இயற்றப்பட்டதோ கொலைவெறிப் பாடல்…?
அன்றி ” கம்பன் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்” என்ற பட்டியலில் இடம்பெற நினைத்து புலவர் இப்பாடலை இயற்றியிருப்பாரோ எனக் கேட்கத் தோன்றுகிறது.

” தமிழ்.. தமிழ்” எனத் தவித்துக் கொண்டிருக்கும் கலைஞர் தன் ஆட்சியில் செய்த ஒரே நல்ல விடயம், தமிழ்ப் படங்களுக்குத் தமிழில் பெயர்வைக்க வேண்டும் என்பதுதான்.ஏதோ, அவரால் முடிந்த நல்ல விடயம் இது. இப்படி படத்தின் பெயர், படப் பாடல்கள் இவையெல்லாம் தமிழில்தான் இருக்க வேண்டும் என ஒவ்வொரு ஆட்சியிலும் சட்டம் போட்டுக் கொண்டிருக்க முடியுமா என்ன?

தமிழுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் கலைஞர் குடும்பத்தினருக்குச் சொந்தமான தொலைக்காட்சி சானல்களில் கூட, “3” படத்தை மூன்று என தமிழில் சொல்லாமல், ” த்ரீ” என பெருமை பொங்க சொல்வதும், “உலகப் புகழ் பெற்ற ஒய் திஸ் கொலைவெறி பாடல்” என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பிப்பதும் தனிக்கதை.

இதில் ஆறுதல் தரக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் ” கொலைவெறிடா – யாழ்ப்பாணம் பதிப்பு ” என்கிற தலைப்பில் ஒரு தமிழ்ப் பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலை இயற்றி, இசையமைத்து பாடியவர் எஸ்.ஜெ. ஸ்டாலின் என்பவர். அதற்கான காணொளி கீழே தரப்பட்டுள்ளது.

” ஒபாமாவே பாராட்டியிருக்கிறாராம்”, ” அமெரிக்காவில்கூட தனுஷைப் பாட கூப்பிடுறாங்களாம் “, ” அமெரிக்கா வரை அவர் புகழ் பரவிடுச்சி” என அங்கலாய்க்கும் அலப்பறைகள் ஒன்றை யோசித்துப் பாருங்கள். எந்த தமிழ்ப் பாடலையாவது அல்லது பாடகரையாவது அமெரிக்கர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி இருக்கிறார்களா? நாலைந்து தமிழ் வார்த்தைகளைப் போட்டு, தமிழ்ப் படத்தில் அந்தப் பாடலை நுழைத்துவிட்டால், பப்பா பப்பா என கோரஸ் பாடும் பாப்பாக்களாகி விட்டோமா நாம்…?

பாதி பதிவுலகம் இந்தப் பாடல் வேண்டாமென போராடிக்கொண்டிருக்கிறது. தப்புத் தப்பாய் தமிழைத் தட்டும் சில பதிவர்கள் கூட இதில் அடக்கம். மெல்லத் தமிழ் இனிச் சாகும்?-இதுவா தமிழ்ப் பற்று? என்கிற என் முந்தைய பதிவிலேயே இந்தப் பிழைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இருப்பினும் தப்பாய்த் தட்டச்சு செய்யும் தமிழர்களே மேல் என்கிற நிலைக்குக் கொண்டு வந்து விட்டது இந்தப்பாடல். ( வரிக்கொரு வார்த்தை என்று பிழை இருந்தால் கூட இப்படி ஒரு பாடலை நம்மால் எழுத முடியாதே!)

இந்தி எதிர்ப்புப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் என சில ஆண்டுகளுக்கு முன் கொடிபிடித்தவர்கள் நம் தமிழர்கள். இப்படி தேசிய மொழியையே உதறித் தள்ளியவர்கள் நாம். இன்றோ செயலற்றவர்களாகி நிற்கிறோம். தமிழ்ப் பாடலில் கொஞ்சம் ஆங்கிலம் இருந்தால் பரவாயில்லை என விட்டுக் கொடுத்தோம். இன்றோ தமிழ்ப் பாடலில் கொஞ்சம் தமிழே எஞ்சியுள்ளதே என விம்மி நிற்கிறோம்.

” விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை ” என்பதை குடும்பத்திலும், கோபத்திலும் பொருத்திப் பார்க்காமல், நம் மொழியுடன் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படி மொழியையும், கலாச்சாரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொடுப்பதினாலேயே கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டுமென நாம் போர்க்கொடி தூக்க, ஜல்லிக்கட்டு தடை செய்யப்படக் கூடாது என வழக்கு மன்றம் செல்ல, தமிழ்ப் பெயர்களே தமிழ்ப் படங்களுக்கு வைக்கப்பட வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட வித்திட்டது.

” சென்றிடு வீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!”

என்றுதான் பாரதி சொன்னாரே தவிர,

“சென்றிடு வீர் எட்டுத்திக்கும் – தமிழ்த்
தாயைக் கொண்ட ங்கே சேர்ப்பீர்!”

எனச் சொல்லவில்லை.

கொலைவெறியைக் கேட்டு விம்முகின்ற என் இதயத்தின் வலி தீர்க்க விரல்கள் கண்ட வழிதான் இந்தக் கட்டுரை. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

Advertisements

3 thoughts on “கொலைவெறி – வாழுமா தமிழ்?

  1. தங்களின் ஆதங்கமும், தமிழின் மீதும், பாரதி மீதும் தங்களுக்குள்ள பற்றும் நன்கு, என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    இந்தக்கட்டுரை நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்.

    இதைப்பற்றி மேலும் கருத்துக்கள், வாய்ப்பு கிடைக்கும் போது நமக்குள் பகிர்ந்து கொள்ளலாம்.

  2. என்ன எழுதுவது எனத் தெரியவில்லை. பேசாமல் தூக்கிப் பிடிக்காமல் அலட்சியம் பண்ணுவது சிறப்போ என்று எண்ணத் தோன்றுகிறது. உங்கள் உணர்வு புரிகிறது. தமிழ் பற்றும் புரிகிறது சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s