சீறுகின்ற காளை… அதை அடக்குகின்ற வேளை…

தமிழர்களை மகிழ்விக்கக் கூடிய பண்டிகைகளில் இன்றியமையாதவை உழவர் திருநாளும், சித்திரைத் திருநாளும். ஆண்டில் ஒரு நாள் கொண்டாடக் கூடிய விடயம் பண்டிகை என நம் அனைவருக்கும் தெரியும். மாதம் முழுவதும் கொண்டாடப்படும் விடயம் என்னவென்று தெரியுமா…?ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு தான் அது. தைத் திங்கள் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு முறைகளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டு வேண்டுமா வேண்டாமா என்பதை இறுதியில் அலசுவோம்.

ஜல்லிக்கட்டு – பெயர்க் காரணம் :

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, “சல்லி காசு” எனப்படும் நாணயங்கள் உபயோகத்தில் இருந்தன. இந்த நாணயங்களை காளையின் கொம்பில், ஒரு துணியில் போட்டு கட்டி விடுவார்கள். இதைத் தான் “சல்லி கட்டு” என்றழைத்தனர். இந்த சல்லி கட்டு போட்டியின் முடிவில் வெல்லும் வீரருக்குச் சொந்தமாகும். ” சல்லி கட்டு” என்பதே மருவி பின்னாளில் ” ஜல்லிக்கட்டு” என்றானது.

தோற்றம் :

சிலம்பில் ஏறு தழுவுதல் பற்றிய குறிப்புகள் காணக் கிடைப்பதால், இவ்வீர விளையாட்டு இரண்டாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னரே தோன்றியிருக்கலாம் என்பது நம் கருத்து. பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில், அதாவது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஜல்லிக்கட்டு இருந்து வந்திருக்கிறது. பாண்டியர்களின் நாள்காட்டியில் இந்த விழா பற்றிய குறிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏறு தழுவுதலை தேசிய விளையாட்டாகக் கொண்ட ஸ்பெயின் நாட்டில் கூட 15ஆம் நூற்றாண்டிலிருந்துதான் “Bull Bitting” என்ற பெயரால் குறிக்கப்பட்டு இவ்விழா தொடர்ந்து நடத்தப்படுகிறது என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு – வகைகள் :

ஜல்லிகட்டில் இரண்டு வகைகள்  உள்ளன.  வாடிவாசல், வெளிவிரட்டு என்பன அவ்விரண்டு வகைகள். முன்னதில் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக திறந்துவிடப்படுகின்றன. பின்னது வெளிவிரட்டு எனப்படும் திறந்தவெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படுவது. பின்னதில் மாடு எந்தப் பக்கம் இருந்து வரும், யாரைத் தூக்கும் என்று தெரியாது. அந்த இடம் ஒரு யுத்தகளத்தை ஒத்திருக்கும்.

சிறுவயல், பலவான்குடி, திருப்பத்தூர், வேந்தன்பட்டி, ஆத்தங்குடி, வெளுவூர் என்று மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டுகள் வெளிவிரட்டு வகையைச் சேர்ந்தவை.

ஜல்லிக்கட்டு  – என்ன? எப்படி? :

இந்த ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார்படுத்துவதே ஒரு தனிக்கலை எனலாம். இந்தக் காளைகள் எந்த வேலையும் செய்வதில்லை. இவற்றிற்கு பச்சரிசி மாவும், நவதானியங்களும் உண்ணக் கொடுக்கப்படுகின்றன. மேலும், இந்தக் காளைகள் சற்றேறக் குறைய வளர்ப்பவரின் குணத்தைக் கொண்டிருக்கும். இந்த ஜல்லிக்கட்டுக் காளைகள் விளையாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில் சாதுவாகவே இருக்கின்றன. அதாவது, இவற்றிற்கு இது விளையாட்டு என்பது தெரிந்தே இருக்கிறது.

மேலும், விளையாட்டினூடே  மாடு நுரை தள்ளிவிட்டால் உடனே விளையாட்டை நிறுத்தும்படியாக அறிவிப்பு வந்துவிடுகிறது. அது போல அந்த மாடுகளைப் பிடிக்க முயற்சிக்கின்றவர்கள்  பரிசுப்பணத்தின் காரணமாக போட்டியில் கலந்து கொள்வதில்லை. அது தரும் சாகச உணர்வையே பெரிதாக நினைக்கிறார்கள்.

இலக்கியச்சான்றுகள் :
                                                      கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
                                                      புல்லாளே,ஆயமகள்’ (கலி.முல்லை.103 63-64)

அதாவது, ஏறு தழுவும் ஆண்களை பண்டைக் காலப் பெண்டிர் விரும்பி மணந்தனராம். ஆயர்குலப் பெண்டிர் தெருவில் பால் மற்றும் பால் பொருட்களினை விற்கும் பணியினை அந்நாளில் மேற்கொண்டிருந்தனர். அவ்வாறு தெருவில் அப்பெண் நடந்து செல்லும்போது, இவளின் கணவன் ஏறுதழுவிய வீரன் என அறிந்து மற்ற ஆண்களெல்லாம் அப்பெண்ணிடம் மரியாதையுடனே நடந்துகொள்வராம். அந்நாட்களில் திருமணம் முடிப்பதற்கு ஒரு ஆடவன் ஏறு தழுவியிருக்க வேண்டுமென்பது முக்கியத் தகுதியாகும்.  இவ்வாறாக முல்லைக் கலி எடுத்தியம்புகிறது.

இந்த ஏறுதழுவுதல் முல்லை நில மக்களால் மட்டுமே போற்றப்பட்ட விளையாட்டு என விவாதம் வைப்பவர்கள் சிலர்.  அப்படிப்பட்டவர்கள் கீழ்க்கண்ட செய்யுளைப் படித்தால் உண்மை நிலையறியலாம்.

‘இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை’ (மலை.330-335)

– மலைபடுகடாம்.

குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர் என்பதே இச்செய்யுளின் பொருள்.

இவ்வாறே சிலம்பும்,

‘மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக்
முல்லையம் பூங்குழல் தான்’ (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8)

வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சுட்டுகிறது.

இன்றைய நிலை :

இன்றும் ஜல்லிகட்டு நடந்தக்கூடாதென்று நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. வாதபிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. ஜீவகாருண்ய நிறுவனங்கள் போராடுகின்றன. ஆனால் இந்த விளையாட்டின் பின் மனிதர்க்கு உள்ள மனப்போக்கும், மாடுகளைச் சண்டைகளுக்குத் தயார் படுத்தும் விதமும், அதன் இலக்கியத் தொன்மையும் இது வெறும் வெறியூட்டும் விளையாட்டில்லை என்றே உணர வைத்துள்ளது. அதே நேரம், பணத்திற்காக வெளி நாட்டினர் முன்பாக காளைச் சண்டைகளை நம்மவர்கள் நடத்துவதையும் ஏற்பதற்கில்லை.

ஸ்பெயினில் இன்றும் காளைச் சண்டைகள் நடக்கின்றன.  குதிரை பந்தய ரேஸ் உலகெங்கும் நடந்தவாறே தான் உள்ளது. நாய்களைப் பழக்கி சண்டையிடுவது அலாஸ்காவில் காணப்படுகிறது. இவை முறைப்படுத்தபட்டிருக்கின்றன. மட்டுமன்றி மிருகங்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்த அக்கறைகள் முறையாக மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் படுகின்றன. ஆனால் நம்மிடையே அதற்கான முயற்சிகள் மிக மிகக் குறைவே. எல்லா வீரக்கலைகளும் போலவே தான் ஜல்லிகட்டும். அதில் மாடுகள் கொல்லப்படுவதில்லை.

என்ன செய்யலாம் ? :

நடத்தப்படும் வீர விளையாட்டு ஆறறிவு கொண்ட காளையோடல்லாமல்  ஐந்தறிவு கொண்ட காளையோடே என்றறிந்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு இவ்விளையாட்டை அனுமதிக்கலாம்.  காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும்,சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும்,மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதலை மறக்காமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் கவனம்செலுத்த வேண்டும்.

Advertisements

7 thoughts on “சீறுகின்ற காளை… அதை அடக்குகின்ற வேளை…

 1. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியால் விலைமதிப்பற்ற பல மனித உயிர்கள் ஆண்டுக்கு ஆண்டு பலியாவதாக செய்திகள் கேட்பதால், நானே இதெல்லாம் தேவை தானா? என்று இந்தத்தங்களின் பதிவினைப் படிக்கும்வரை நினைத்திருந்தேன்.

  ’ஏறுதழுவதல்’ என்ற வீர விளையாட்டு, பாரம்பர்யம் மிக்கது, தொன்மையானது, தமிழர் பண்பாடு சார்ந்தது என்று ஏதேதோ சொல்லி, ஆதாரங்களை எடுத்துக்கூறி என்னையும் உங்கள் கட்சிக்கு இழுத்து விட்டீர்களே! சபாஷ்.!!

  நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள். படங்களும் ஜோர். அந்த ஓட்டைக்காலணா நானே எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது 1955 இல் பயன் படுத்தியுள்ளேன்.
  அந்த ஓட்டைக்காலணா பூப்போட்டு அழகாக செப்பில் இருக்கும். அதற்கு கீழே தம்படி என்று ஒரு சிறிய ஸ்டிக்கர் பொட்டுப்போன்ற திக்கான நாணயமும் உண்டு. அதாவது 3 தம்படி = காலணா [1/4 அணா] ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள்.
  64 ஓட்டைக்காலணா = 1 ரூபாய்; 192 தம்படிகள் = 1 ரூபாய்.

  ஒரு ஓட்டைக்காலணா கொடுத்து மூன்று கம்பர்கட் வாங்கி எவ்வளவோ முறை சாப்பிட்டுள்ளேன்.

  [கம்பர்கட்=வெல்லம்+தேங்காய்+ஏலக்காய் சேர்ந்து செய்த ஒரு தின்பண்டம்]

  //’அவ்வாறு தெருவில் அப்பெண் நடந்து செல்லும்போது, இவளின் கணவன் ஏறுதழுவிய வீரன் என அறிந்து மற்ற ஆண்களெல்லாம் அப்பெண்ணிடம் மரியாதையுடனே நடந்துகொள்வராம். அந்நாட்களில் திருமணம் முடிப்பதற்கு ஒரு ஆடவன் ஏறு தழுவியிருக்க வேண்டுமென்பது முக்கியத் தகுதியாகும். //

  அருமையான தகவல்.

  [ஒரு நகைச்சுவைக்காக ஒன்று கூறுகிறேன். Take it easy.

  இந்தக்காலப்பெண்களைத் தழுவுவதும் நீங்கள் சொல்லும் ஏறுதழுவுவதும் ஒன்று தான் என்று நினைத்து இப்போதெல்லாம் இந்த முறையைக் கைவிட்டிருப்பார்களோ!

  காளை போல வீர நங்கைகளாகவே நிறைய பெண்கள் இன்று படிப்பினாலும், உத்யோகத்தினாலும், கை நிறைய சம்பாதிப்பதாலும் என் கண் பார்வைக்குத் தெரிகின்றனர். நெருங்கினால் முட்டித்தள்ளி, முட்டிக்குமுட்டி தட்டி விடுவார்கள், அதுவும் பெண் போலீஸாராலேயே! – அழகுப்பெண்களின் கையாலே அடி விழுந்தாலும் சந்தோஷம் என்ற பாடல் தான் ஞாபகம் வருகிறது ;)))) ]

  பதிவு மிகவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
  பிரியமுள்ள vgk

  • நன்றி சார்… நீங்களும் என் கட்சியில் சேர்ந்து கொண்டதற்கு…
   தம்படி என்ற நாணயம் பற்றி நான் கேள்விப்பட்டதுகூட இல்லை. தெரியாத தகவலை தெரியப்படுத்தியதற்கு நன்றி சார்.
   அந்த கம்பர்கட் மிட்டாயை நானும்கூட ருசித்திருக்கிறேன் சார்.
   இந்தக் காலத்தில் வீர நங்கைகளாக இருந்தும் கூட பெண்கள் சில நேரங்களில் கிள்ளுக்கீரையாகவே பயன்படுகின்றனர்.

 2. //இந்தக் காலத்தில் வீர நங்கைகளாக இருந்தும் கூட பெண்கள் சில நேரங்களில் கிள்ளுக்கீரையாகவே பயன்படுகின்றனர்.//

  ஆமாம் நுண்மதி. இதையும் மறுப்பதற்கு இல்லை தான்.

  இயற்கை அவர்களுக்கு என்று ஒருசில வேதனைகள்யும் சோதனைகளையும் சுமந்து தான் ஆகவேண்டும் என்று கொடுத்து விட்டதே, என்ன செய்வது!

  இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமோ!

  வீரமோ, தீரமோ, படிப்பறிவோ, சம்பாத்யமோ, சாமர்த்தியமோ இல்லாத மிகச்சாதாரண நங்கை கூட, தன் நல்ல குணம் கொண்ட கணவனால் கண்ணின் கருவிழிபோல காக்கப்பட்டு மிகச் சந்தோஷமாகவும் ஆங்காங்கே வாழ்ந்து வருகிறார்கள், நுண்மதி.

  இதெல்லாம் ஒரு பொருளைப் பயன் படுத்துபவரின் குணாதிசயத்தைப் பொருத்த விஷயம். அவரவர் விதி தலையெழுத்து என்று தான் சொல்ல வேண்டும்.

  போராடி வெற்றி பெறுபவர்களும் சிலர் உண்டு. போராடினாலுமே கூட, போராட்டத்தில் வெற்றி பெற்றாலும் கூட, கடைசியில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாபவர்கள் இந்தப்பெண்களே .

  1970 முதல் கடந்த 30 ஆண்டுகளில் பெண்களின் முன்னேற்றம் எல்லாத் துறைகளிலும் அதிக அளவில் தான் உள்ளது. நீங்கள் சொல்லும் கிள்ளுக்கீரை விஷயம் மாற மேலும் 30 ஆண்டுகள் ஆகலாமோ என்னவோ? பார்ப்போம்,

  என்றும் நாம் நல்லதே நினைப்போம்.!
  என்றாவது ஒரு நாள் நல்லதே நடக்கும் !!.

  • உண்மைதான் சார்.

   \\வீரமோ, தீரமோ, படிப்பறிவோ, சம்பாத்யமோ, சாமர்த்தியமோ இல்லாத மிகச்சாதாரண நங்கை கூட, தன் நல்ல குணம் கொண்ட கணவனால் கண்ணின் கருவிழிபோல காக்கப்பட்டு மிகச் சந்தோஷமாகவும் ஆங்காங்கே வாழ்ந்து வருகிறார்கள், நுண்மதி. \\

   இதற்கான எடுத்துக்காட்டினை நம் வீட்டுப் பெரியவர்கள் மூலமே கண்கூடாகக் காண முடிகிறதே…!

 3. தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதலை மறக்காமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் கவனம்செலுத்த வேண்டும்.//

  ஜல்லிக்கட்டுக்காளையாய் துள்ளித்தந்த அருமையான பகிர்வுக்க்ளுக்கு பாராட்டுக்கள்..

 4. நுண்மதி said: 1:03 மாலை இல் ஜனவரி 14, 2012

  உண்மைதான் சார்.

  ****வீரமோ, தீரமோ, படிப்பறிவோ, சம்பாத்யமோ, சாமர்த்தியமோ இல்லாத மிகச்சாதாரண நங்கை கூட, தன் நல்ல குணம் கொண்ட கணவனால் கண்ணின் கருவிழிபோல காக்கப்பட்டு மிகச் சந்தோஷமாகவும் ஆங்காங்கே வாழ்ந்து வருகிறார்கள், நுண்மதி.****

  //இதற்கான எடுத்துக்காட்டினை நம் வீட்டுப் பெரியவர்கள் மூலமே கண்கூடாகக் காண முடிகிறதே…!//

  மிகச்சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.

  கண்ணின் கருவிழிகளை இமைகள் காப்பது போல காப்பதிலும்,
  மிகச் சந்தோஷமாக என்னைச் சார்ந்தவர்களை வைத்துக்கொள்வதிலும் என் பங்களிப்பு மிக மிக அதிகம். அதனாலேயே என்னால் அப்படி எழுத முடிந்தது..

  இல்லாவிட்டால் வெற்றிகரமாக 39 ஆண்டுகள் முடித்து 40 ஆவது ஆண்டிலும் இன்றுவரை சந்தோஷத்துக்கு எந்தக்குறைவும் வராமல் எப்படிக் கொண்டுபோக முடியும்?

  உண்மையான சந்தோஷம் என்பது என்னவென்று தெரியாமலேயே பலரும் பணத்துக்காகவும், பகட்டான போலி வாழ்க்கைக்கு மட்டுமே ஆசைப்பட்டு உண்மையான சந்தோஷம் என்பதை கடைசிவரை அனுபவிக்காமலேயே, பலவிதமாக அல்லல் படுகிறார்கள் என்பது என் அபிப்ராயம்..

  தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி.

  பிரியமுள்ள vgk

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s