இ(வி)லக்கியக் காதல்…

இலக்கியக் காதல்…

 

பதினாறில் பூத்துக் குலுங்கி

இருபதில் மணம் முடித்து

நாற்பதில் பிள்ளைகள் பெற்று

அறுபதில் துணைவியிடம் ஆசையாய்ப் பேசினால்கூட

சபலம் என ஒதுக்கி வைக்கும் தன்மையது…

 

இதோ இலக்கியத்திற்கும் எனக்குமான முரண்பாடு…

 

இருபதில் வருவது இனக்கவர்ச்சி…

நாற்பதில் வருவது காதல்…

அறுபதில் வருவது கனிந்த காதல்…!

 

இந்தக் கனிந்த காதலை

இலக்கியம் சபலமென விலக்கிவிடுகிறது…!

 

 

அலுப்புத்தட்ட வாழ்ந்தும் சலிக்காமல்

அன்பே இது நொடி காறும் உனை நேசிக்கிறேன்

எனும் அன்பனைப் பார்த்து

ஒரு துளிக் கண்ணீர் உதிர்ப்பாளே கிழவி

அங்கே வாழ்கிறது உண்மைக் காதல்…!

 

முத்தத்தில் தொடங்கி

சுதந்திரம் வரை

மொத்தமும் கேட்கிறது

இளமைக் காதல்…!

 

மொத்தமும் கேட்கலாம்

எனினும் ஒரு முத்தமாவது

கொடு எனக் கேட்கிறது

கனிந்த காதல்…!

 

இளமையில் செத்துப் போகும்

இலக்கியம் விளக்கிய காதலினும்

முதுமையிலும் வாழும்  

இலக்கியம் விலக்கிய எம் காதல்

முற்போக்கானது…!

6 thoughts on “இ(வி)லக்கியக் காதல்…

  1. தாங்கள் எழுதியுள்ளவை அனைத்தும்,
    தாங்கள் சொல்லும் கனிந்த காதல்
    போலவே அழகாகவே உள்ளன.

    ஆனாலும் எனக்கு ஓர் சின்ன சந்தேகம்!

    பதினாறில் பூத்துக் குலுங்கி
    இருபதில் மணம் முடிக்கும்
    பருவத்தில், இருந்து கொண்டு
    இலக்கியக் காதல்
    பற்றி மட்டுமே இப்போது பேச
    வேண்டிய நீங்கள், கனிந்த
    காதலை எப்படி எங்கு யாரிடம்
    கவனித்து எழுதினீர்கள்?

    என்பதே என் சந்தேகம்! 😉

    பூவாகிக் காயாகிப் பின் கடைசியில் தானே கனியமுடியும்!

    பேஷ், பேஷ்! தினமும் ஒரு காதல் கவிதை தருகிறீர்களே! ;))))

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

    • \\தாங்கள் எழுதியுள்ளவை அனைத்தும், தாங்கள் சொல்லும் கனிந்த காதல் போலவே அழகாகவே உள்ளன.\\

      நன்றி சார்.

      \\ஆனாலும் எனக்கு ஓர் சின்ன சந்தேகம்!

      பதினாறில் பூத்துக் குலுங்கி இருபதில் மணம் முடிக்கும் பருவத்தில், இருந்து கொண்டு இலக்கியக் காதல் பற்றி மட்டுமே இப்போது பேச வேண்டிய நீங்கள், கனிந்த காதலை எப்படி எங்கு யாரிடம் கவனித்து எழுதினீர்கள்? என்பதே என் சந்தேகம்! \\

      அதுக்குத்தான் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி இருக்காங்களே. இந்த வயசான காலத்துலயும் அவங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற அக்கரையையும், பாசத்தையும் தினம் தினம் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டிருக்கேன் சார்…

      \\பூவாகிக் காயாகிப் பின் கடைசியில் தானே கனியமுடியும்!\\

      உண்மைதான் சார்… இலக்கியக் காதல் கனிவதில்லை… வெம்பி விடுகிறது… ஆனால், இலக்கியம் விலக்கிய காதலோ, கனியாவது மட்டுமின்றி விருட்சங்களையும் தோற்றுவிக்கிறதே…

      \\பேஷ், பேஷ்! தினமும் ஒரு காதல் கவிதை தருகிறீர்களே! )))
      பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். vgk\\

      நன்றி சார்.

  2. அன்பின் நுண்மதி – அருமையான சிந்தனை – கனிந்த காதல் சிறந்த காதல் – சொல்லில் வடிக்க இயலாத உணர்வுகளை உள்ளடக்கிய காதல். நன்று நன்று – நல்வாழ்த்துகள் நுண்மதி – நட்புடன் சீனா

நுண்மதி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி