மெல்லத் தமிழ் இனிச் சாகும்?-இதுவா தமிழ்ப் பற்று?


      


“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”
என்றான் பாரதி.
அது அவன் தமிழின்பால் கொண்ட தமிழன்பு.

“தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற அவனது குரல் உலகெல்லாம் ஒலித்ததோ இல்லையோ, சிலர் உள்ளங்களில் நிச்சயமாய் ஒலித்தது. அதன் விளைவினாலேயே தமிழ் இன்னமும் பேச்சு வழக்கிலாவது வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற ஆறுதல் ஏற்படுகிறது.

நம்மில் எத்தனை பேர் தமிழை நேசிக்கிறோம், எத்தனை பேர் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்ற கேள்வியை முன்வைத்தால் நான் இருக்கிறேன் எனக் கூறிக்கொண்டு வருவதற்குப் பெரும்பான்மையினர் உளர். ஒரு சிறு செய்தியை நான் கூறக் கேட்டு நீ எழுத வேண்டுமென வேண்டுகோள் வைப்பின், நாம் தெரிந்து கொள்ளலாம், அவர்களின் உண்மையான நேசத்தை.

அகோரப் பசி ஏற்படும்போது, கிடைத்ததையெல்லாம் விழுங்கும் கொடூர அரக்கனாய் ஆங்கிலம் நம் தமிழை விழுங்கிக்கொண்டிருக்கிறது. அந்த அரக்கனுக்கு ஊட்டிவிட்டுக்கொண்டு இருக்கிறோம் நாம்.

வலைப்பூக்களில் தமிழில்  எழுதுகிறவர்கள் அநேகர் தமிழை எழுத்துப் பிழையின்றி தான் எழுதுகின்றனரா? தவறு செய்வது மனித இயல்பு. எனினும் சிறிதளவு கூடுதல் கவனம் செலுத்தினால்,எழுத்துப் பிழைகள் குறையுமே.

ஆங்கிலம் வேண்டாம் என்றோ, தமிழ் மட்டும் போதுமென்றோ வாதம் வைப்பதற்காக அல்ல இந்தக் கட்டுரை.தமிழர்களாகிய நாம் தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் தள்ளி நின்று ரசித்துக்கொண்டிருக்கிறோம். இதுதான் நாம் தமிழின்பால் கொண்ட பேரன்பா?

 

மண்பானையை உதறித் தள்ளிவிட்டு நட்சத்திர உணவகங்களை நாடினோம்.இதோ, இன்று நட்சத்திர உணவகங்கள் அதே மண்பானையில் சமைக்கப்பட்ட உணவினை விற்று நூற்றுக்கணக்கில் லாபம் அள்ளுகின்றன. இப்போது மட்டும் ஆரோக்கியம் என்று கூறிக்கொண்டு மீண்டும் மண்பானைகளை நட்சத்திர உணவகங்கள் வாயிலாக ஏற்றுக்கொண்டோம்.  இங்கே நாம் நமது பண்பாட்டை தொலைத்துவிடவில்லையா?

நான் சில மாதங்களுக்கு முன் ஒரு சுற்றுலாத்தலத்திற்கு செல்ல நேர்ந்தது. அங்கே ஒரு அயல்நாட்டுப் பெண்மணி திக்கித் திணறி தமிழ் பேசிக்கொண்டிருந்தார்.அயல்நாட்டினர் பலர் தமிழின் சிறப்புணர்ந்து, நம் நாட்டிற்கு வந்து தமிழ் கற்கும் இவ்வேளையில், நலம் விசாரிக்கக்கூட HOW ARE YOU எனக் கேட்கும் நாம் நமது சுயத்தை இங்கு இழந்துவிடவில்லையா?

“தமிழுக்கு என்னவாகி விட்டதாம் இப்போ? எல்லாம் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறது” எனக் கேட்பவர்களுக்கு இப்போதாவது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என விளங்கியிருக்கும்.

நாம் “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை” தமிழில் மொழிபெயர்ப்பது மட்டுமல்லாமல், தவறாக எழுதி தமிழ் மொழியையும் பெயர்த்துக்கொண்டிருக்கிறோம்.

“தேமதுரத் தமிழோசை” இன்று தொலைக்காட்சிப் பெட்டிகளிலும், வானொலிகளிலும் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு, வலைப்பூக்களிலும் வதைப்பட வேண்டுமா?

தமிழில்  எழுதப்பட்ட  திருக்குறளை உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்த்துள்ளனர் என்றும், தமிழ் செம்மொழியாக உயர்ந்துவிட்டது என்றும்,நாட்டின் ஒரு மூலையில் எவனோ சாதித்தால் நானும் தமிழன் தான்டா என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்வதை விட்டு விட்டு, தமிழைக் கற்றுக்கொள்ளப் பழகுவோம். பின்னர், “தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்வோம்”.

Advertisements

2 thoughts on “மெல்லத் தமிழ் இனிச் சாகும்?-இதுவா தமிழ்ப் பற்று?

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s