முதல் அறிமுகம்

எது எதைப் போலிருக்கும்

என அறிந்ததில்லை நான்

எனக்கு நீ அறிமுகப்படுத்தும்வரை…

 

ஈரைந்து திங்கள் சுமந்து

ஈன்ற நாள் முதல்

ஈண்டு நான் உனக்கீந்த இன்னல்கள்…

 

 

எது எதைப் போலிருக்கும்

என நீ எப்படி

எனக்குரைத்தாயோ…

 

அது அதைப் போலவே

அச்சில் வார்த்தாற்போல்

அப்படியே இருக்கிறது…

 

எது எப்படியாயினும்

என்னை வியக்கவே வைக்கிறது உன்

எண்ண ஓட்டங்கள்…

 

 

குருடனாய் நானிருந்த போது

கண்களாயிருந்து எவ்வெவற்றைக்

காட்டினாயோ அவை அப்படியேயிருக்கிறது…

 

என் கண் அறுவையின் பின்னான

காட்சிகளிலும் கூட

முதல் அறிமுகமாய் நீ …

 

( இப்படியாய் இன்னல்கள் பல அனுபவித்தாலும் நம்மை விட்டுக்கொடுக்காத அன்னயர்களுக்காய் அன்னையர் தின வாழ்த்துக்களோடு என் எழுத்துக்களும் சமர்ப்பணம்.)

ஒரு காதல் உரையாடல் – 3

காதலி : இயற்கைப் பேரழிவின் தாக்குதல் எப்படிப்பட்டதாய் இருக்கும்…???

காதலன் : உன் இயற்கைப் பேரழகின் தாக்குதலின் முன் அது கூட மெல்லியதாகவே இருக்கும்…

காதலி : பார்த்தும் சலியாதது எது…???

காதலன் : உன் வெட்கப் புன்னகையினால் நான் ஒருபோதும் சலித்துக்கொண்டதில்லை…

காதலி : உங்களுக்குப் பிடித்த மலர் எது..??

காதலன் : இப்போதெல்லாம் உன் முக மலரைத்தவிர பிற மலர் எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை…

காதலி : தொழில் நுட்பம் பற்றி உங்களுக்குத் தெரியுமா…???

காதலன் : உன் எழில் நுட்பம் கண்ட எனக்கெதற்குத் தொழில் நுட்பம்….???

காதலி : இரவு ஏன் அமைதியாக இருக்கிறது…???

காதலன் : உன் சிணுங்கல்களைக் கேட்டு இரசிக்கும் பொருட்டே…

காதலி : நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் இரகசியம் ஏதேனும் உண்டா…???

காதலன் : உன் கூந்தலினின்று விழும் ஒரு துளி நீர் எத்தனை ஆண்டு காலம் தவம் செய்திருக்கும் என்று அறிந்துகொள்ள ஆர்வம் உண்டெனக்கு…

காதலி : பரதத்தில் தங்களுக்கு ஆர்வமுண்டா…???

காதலன் : உன் ஒவ்வொரு அசைவினையும் கவனிக்க ஆர்வமற்றுவிடுமா என்ன…???

காதலி : கற்கள் சிலையாவது எப்படி?

காதலன் : உன் கால்கள் அவைகளை முத்தமிடும்போது
காதலி : உங்களுக்கு அணிகலன்கள் பிடிக்குமா…?
காதலன் : பெண்மைக்கு அணிகலனான உன்னைப் பிடிக்காமல் போய்விடுமா என்ன?
காதலி : நேரமாகி விட்டது. என் வீட்டார் என்னைத் தேடக்கூடும். மறுமுறை சந்திப்போமா?
காதலன் : நொடிக்கொருமுறை தேடும் என் விழித் தேடலில் நீ சீக்கிரமே சிக்கிவிடக் கூடும். விழித் தேடல் இமைத் தேடலாக மாறும் முன் வந்திடு என்னிடம்…

கணநேர ஏமாற்றம்

புத்தக மூட்டையை

சுமந்து நிற்கும்

பள்ளிக்குழந்தைகள்…

அலுவலகம் செல்லவேண்டி

சலிப்பாய் நிற்கும்

சில மனிதர்கள்…

நாலைந்து பைகளை

அடுக்கிக்கொண்டு விலா ஒடிய

நிற்கும் கிழவி…

கல்லூரி செல்லவேண்டி

கூட்டமாய் நிற்கும்

இளம்பெண்கள்…

ஒருவழியாய் எல்லோரையும்

கணநேரத்தில்

ஏமாற்றி விடுகிறது…

நடத்துனரின் கழுத்தில்

நர்த்தனமாடும்

விசில்…

பன்முகத் திறமையாளர் விருது..

பன்முகத் திறமையாளர் விருது எனப்படும் இந்த “Versatile Blogger Award” திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களால், பிப்ரவரி 5,2012 அன்றே வழங்கப்பட்டது. அலுவலகப் பணிகள் அதிகமாக இருந்ததால், இன்றுதான் எழுத முடிந்தது.

திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களைப் பற்றி சில வரிகள்…

* நகைச்சுவை சிறுகதைகள் எழுதுவதில் தேர்ந்தவர். இவரின் சிறுகதைகளில் பலவற்றை ஒரே இரவில் தூங்காமல் படித்திருக்கிறேன்.

* தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவராக இடம்பெற்றவர்.

* சில நேரங்களில் கவிதையும் எழுதுவார்.

* மேலும் சில நேரங்களில், குழந்தைகளின் அறிவை வளர்க்கும் விதமாய் கணக்குகளையும் சொல்லுவார்.

* தற்போது அற்புதமான பல ஆன்மீகப் பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறார்.

* இவரைப் பற்றிய சுயவிபரக் குறிப்பில் ” சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன் என்று குறிப்பிட்டிருப்பார். சாதனைகள் புரிந்த ஒருவர் இவ்வாறாக தன்னடக்கத்துடன் இருப்பது இக்காலத்தில் அரிதே.

* இவரது வலைத்தளத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.

இவருக்குப் பிடித்த விடயங்கள்…

* எழுதுதல்

* வாசித்தல்

*  படம் வரைதல்

*  ஒரு சில கைவேலைகள் செய்தல்

*  திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளை மட்டும் எப்போதாவது தொலைகாட்சியில் ரசிப்பது

*  மிகவும் விரும்பிப்படிக்கும் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுதல்

*  மிகவும் ருசியான ஒருசில சிற்றுண்டிகளை விரும்பிச் சாப்பிடுதல்

 
எனக்கு இந்த விருதினை அளித்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு என் நன்றிகள் பலவற்றை உரித்தாக்குகிறேன்.
இந்த விருதினைப் பெற்றுக் கொள்கிறவர்கள், தனக்குப் பிடித்த ஏழு விடயங்களைச் சுருக்கமாகக் கூறிவிட்டு, பின்னர் தகுதியான ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதினை வழங்க வேண்டுமாம். அவ்வாறு செய்தால்தான் இந்த விருதினை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகுமாம்.
எனக்குப் பிடித்தமான ஏழு விடயங்கள்…
* வாசிப்பது
* எழுதுவது
* பெற்றோருடனும், நண்பர்களுடனும் நேரம் செலவிடுவது
* கோயில்களுக்குச் செல்வது
* தொலைதூரப் பிரயாணம் செய்வது
* கைவேலைகள் செய்வது
* பாடல்கள் கேட்பது.
நான் இந்த விருதினை வழங்க விரும்பும் ஐந்து பதிவர்களின் பட்டியல் இதோ…
திரு.அனந்து அவர்கள்
திரு.விமலன் அவர்கள்
திரு.சென்னை பித்தன் அவர்கள்
திரு.சேவியர் அவர்கள்
திரு.கண்ணன்
தாங்களும் மேற்படி விருதினை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக தங்களின் ஏழு விருப்பங்கள் பற்றி தங்கள் பதிவினில் கூறிவிட்டு, இதே முறையில், தங்களுக்கு மிகவும் பிடித்தமான தகுதி வாய்ந்த மற்ற ஐந்து பதிவர்களுக்கு, இந்த விருதினை அளித்து மகிழுங்கள்.
இந்தத் தொடர் சங்கிலி அறுந்து போகாமல் அவர்களையும் இதுபோலவே செய்யச் சொல்லுங்கள்.

காதலா…! காதலா…?

 

காதல்…
மூன்றெழுத்தில் ஒரு சுகானுபவம்…
மூன்றெழுத்தில் ஒரு பிரளயம்…
மூன்றெழுத்தில் ஒரு பெரும் பிரச்சினை…

எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம், அவரவர் விருப்பத்தையும், அனுபவத்தையும் பொருத்து.


புராணங்களில் ஒவ்வொரு காரண காரியத்திற்கும் சூத்திரதாரியாய் விளங்கியது இதுவே. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளுக்காக இறைவனே இறங்கி வர காரணம் இந்தத் தூய்மையான காதலே. சபரிவாசன் தோன்றவும் சிவபெருமான் மோகினியின் மீது கொண்ட காதல்தானே காரணமாயிற்று. தசரத ராஜன் தன் காதல் மனைவிக்குக் கொடுத்த வரத்தினாலேயே ஸ்ரீ ராமபிரான் காடு செல்ல நேர்ந்தது.சீதாப்பிராட்டியின் மீது கொண்ட காதலினாலேயே பத்துத் தலை இராவணன் செத்துத் தொலைய நேர்ந்தது. ஆதாமுக்கும், ஏவாளுக்கும் இடையில் இருந்ததுகூட காதல்தான்.

காதலைப் பற்றிய வார்த்தைகள் இடம்பெறா இலக்கியங்கள், மக்களின் நினைவுகளிலும் இடம்பெற்றதில்லை. காதலைப் பற்றியே கவிஞர்களின் மூச்சு வலம் வருகிறது.காதலைப் பற்றி எழுதாத எழுத்தாளர்கள் அரியவர்கள்.இப்படியாய் இலக்கியங்களையும் இந்தக் காதல் விட்டு வைத்து விடவில்லை.

அகிலத்தையே வளைக்க விரும்பிய சர்வாதிகாரியும் கூடத் தனது அந்தரங்கத்தில் ஒரு காதலியைப் பெற்றிருந்தான். சரித்திர காலப் போர்களில் காதலின் பங்கு கணிசமானது. உலகமே வியந்து போற்றும் தாஜ்மகால் கூட ஷாஜஹானின் காதலிக்காகக் கட்டப்பட்ட கல்லறைதான். இப்படியாய், வரலாறின் காதலும் கூட வியக்கவே வைக்கிறது.

இன்றளவில் காதல் எப்படியாகிவிட்டது தெரியுமா?
கடற்கரைக் காதல், அலுவலகக் காதல், வலை மையக் காதல், உண்மைக்காதல் இப்படி வகை பிரிக்கும் நிலையில் இருக்கிறது. தொண்ணூறு சதவிகித காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்கும், பத்து சதவிகிதம் மட்டுமே வெற்றி பெறவும் இதுவே காரணம்.


” இந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம்தானடா” என சொன்னாலும் கூட இந்த ஹார்மோன் கலகத்திற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையே. இந்த ஹார்மோன் கலகத்திற்கான மருந்தை மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பது சாத்தியமே. ஒருவேளை, அவர்களுக்குக் காதல் இல்லாமலிருந்தால்!!!

என் பார்வையில் காதல் என்பது…

குழந்தையைப் போன்றது. விரும்பி அள்ளி எடுக்கலாமென்றால், ஓடிப் போய் தள்ளி நின்று, வேடிக்கை காட்டி சிரிக்கும். சீ… வேண்டாம் போ என்றால், நம்மைக் கட்டிக்கொண்டு முத்தங்களை அள்ளி அள்ளி வழங்கும்.


கண்ணாடியைப் போன்றது. நீங்கள் அடித்தால், கைகளைக் கிழித்து சிவப்புச் சாயம் பார்த்து தாகம் தீர்த்துக்கொள்ளும். நீங்கள் சிரித்தால் பதிலுக்குத் தானும் சிரித்து, உங்களை மகிழ்விக்கும்.

உறவுகள் போன்றது.உரிமையாய் சின்ன சின்ன சண்டையிடும். வலிந்து வந்து ஆறுதல் தரும்.

சூரியன் போன்றது. சில நேரம் அனலாய்த் தகிக்கும். சில நேரம் இதமாய் இருக்கும்.

நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்களோ அப்படியே அது. மதம், மனிதம், காமம், குரோதம், இனம்,மொழி இவைகளுக்கு அப்பாற்பட்டது காதல். காதல் வலியது. ஆதலினால் காதல் செய்வோம் எல்லா உயிர்களையும்.

 

கொலைவெறி – வாழுமா தமிழ்?

“புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்”

என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

- மகாகவி பாரதி.

“மெல்லத் தமிழினிச் சாகும்” என பாரதியாரால் சொல்லப்பட்டது என்கிறவர்கள் தயவு செய்து முதல் வரியில் தொடங்கி, எட்டாவது வ்ரியில் முடிந்திருக்கும் இரட்டை மேற்கோள் குறியை கவனியுங்கள். பின்பு கடைசி நான்கு வரிகளைப் படியுங்கள். உண்மை நிலை விளங்கும்.

மேன்மைக் கலைகளைச் சொல்லுந்திறமை தமிழ் மொழிக்கில்லை என நினைத்து இயற்றப்பட்டதோ கொலைவெறிப் பாடல்…?
அன்றி ” கம்பன் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்” என்ற பட்டியலில் இடம்பெற நினைத்து புலவர் இப்பாடலை இயற்றியிருப்பாரோ எனக் கேட்கத் தோன்றுகிறது.

” தமிழ்.. தமிழ்” எனத் தவித்துக் கொண்டிருக்கும் கலைஞர் தன் ஆட்சியில் செய்த ஒரே நல்ல விடயம், தமிழ்ப் படங்களுக்குத் தமிழில் பெயர்வைக்க வேண்டும் என்பதுதான்.ஏதோ, அவரால் முடிந்த நல்ல விடயம் இது. இப்படி படத்தின் பெயர், படப் பாடல்கள் இவையெல்லாம் தமிழில்தான் இருக்க வேண்டும் என ஒவ்வொரு ஆட்சியிலும் சட்டம் போட்டுக் கொண்டிருக்க முடியுமா என்ன?

தமிழுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் கலைஞர் குடும்பத்தினருக்குச் சொந்தமான தொலைக்காட்சி சானல்களில் கூட, “3″ படத்தை மூன்று என தமிழில் சொல்லாமல், ” த்ரீ” என பெருமை பொங்க சொல்வதும், “உலகப் புகழ் பெற்ற ஒய் திஸ் கொலைவெறி பாடல்” என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பிப்பதும் தனிக்கதை.

இதில் ஆறுதல் தரக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் ” கொலைவெறிடா – யாழ்ப்பாணம் பதிப்பு ” என்கிற தலைப்பில் ஒரு தமிழ்ப் பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலை இயற்றி, இசையமைத்து பாடியவர் எஸ்.ஜெ. ஸ்டாலின் என்பவர். அதற்கான காணொளி கீழே தரப்பட்டுள்ளது.

” ஒபாமாவே பாராட்டியிருக்கிறாராம்”, ” அமெரிக்காவில்கூட தனுஷைப் பாட கூப்பிடுறாங்களாம் “, ” அமெரிக்கா வரை அவர் புகழ் பரவிடுச்சி” என அங்கலாய்க்கும் அலப்பறைகள் ஒன்றை யோசித்துப் பாருங்கள். எந்த தமிழ்ப் பாடலையாவது அல்லது பாடகரையாவது அமெரிக்கர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி இருக்கிறார்களா? நாலைந்து தமிழ் வார்த்தைகளைப் போட்டு, தமிழ்ப் படத்தில் அந்தப் பாடலை நுழைத்துவிட்டால், பப்பா பப்பா என கோரஸ் பாடும் பாப்பாக்களாகி விட்டோமா நாம்…?

பாதி பதிவுலகம் இந்தப் பாடல் வேண்டாமென போராடிக்கொண்டிருக்கிறது. தப்புத் தப்பாய் தமிழைத் தட்டும் சில பதிவர்கள் கூட இதில் அடக்கம். மெல்லத் தமிழ் இனிச் சாகும்?-இதுவா தமிழ்ப் பற்று? என்கிற என் முந்தைய பதிவிலேயே இந்தப் பிழைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இருப்பினும் தப்பாய்த் தட்டச்சு செய்யும் தமிழர்களே மேல் என்கிற நிலைக்குக் கொண்டு வந்து விட்டது இந்தப்பாடல். ( வரிக்கொரு வார்த்தை என்று பிழை இருந்தால் கூட இப்படி ஒரு பாடலை நம்மால் எழுத முடியாதே!)

இந்தி எதிர்ப்புப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் என சில ஆண்டுகளுக்கு முன் கொடிபிடித்தவர்கள் நம் தமிழர்கள். இப்படி தேசிய மொழியையே உதறித் தள்ளியவர்கள் நாம். இன்றோ செயலற்றவர்களாகி நிற்கிறோம். தமிழ்ப் பாடலில் கொஞ்சம் ஆங்கிலம் இருந்தால் பரவாயில்லை என விட்டுக் கொடுத்தோம். இன்றோ தமிழ்ப் பாடலில் கொஞ்சம் தமிழே எஞ்சியுள்ளதே என விம்மி நிற்கிறோம்.

” விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை ” என்பதை குடும்பத்திலும், கோபத்திலும் பொருத்திப் பார்க்காமல், நம் மொழியுடன் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படி மொழியையும், கலாச்சாரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொடுப்பதினாலேயே கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டுமென நாம் போர்க்கொடி தூக்க, ஜல்லிக்கட்டு தடை செய்யப்படக் கூடாது என வழக்கு மன்றம் செல்ல, தமிழ்ப் பெயர்களே தமிழ்ப் படங்களுக்கு வைக்கப்பட வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட வித்திட்டது.

” சென்றிடு வீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!”

என்றுதான் பாரதி சொன்னாரே தவிர,

“சென்றிடு வீர் எட்டுத்திக்கும் – தமிழ்த்
தாயைக் கொண்ட ங்கே சேர்ப்பீர்!”

எனச் சொல்லவில்லை.

கொலைவெறியைக் கேட்டு விம்முகின்ற என் இதயத்தின் வலி தீர்க்க விரல்கள் கண்ட வழிதான் இந்தக் கட்டுரை. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

வித்தியாசம்…

நடைப் பயணத்தின் போது
உடன் நடைபயின்று
மகிழ்விக்கும்…

வாகனப் பயணத்தின் போது
சேற்றை முகத்தில்
வாரியடிக்கும்…

கூரைகள் வழியாய்
வழிந்தோடி
மனதைக் கொள்ளையிடும்…

காரைக் கட்டிடங்களினூடே
இயந்திர மனிதன் போல்
பயணிக்கும்…

வரப்புகளினூடே
சேற்றுக் கால்களுடன்
நர்த்தனமிடும்…

பாதாள சாக்கடையில்
கலந்து நின்று
அருவருப்பூட்டும்…

மரங்களுக்குத்
தாய்ப்பாலாகி
மண்ணைக் குளிரூட்டும்…

செல்வதற்கு வழியின்றி
தேங்கி நின்று
நோய் கிளப்பும்…


குழந்தைகளின் மேல்
துள்ளிப் பாய்ந்து
விளையாடும்…

காய்ச்சல் வரும்
என்று  காரணம் சொல்லி
குடைகளில் பட்டுத் தெரிக்கும்….

இப்படியாய்
நிறையவே இருக்கிறது
வித்தியாசம்….

கிராமத்து மழைக்கும்
நகரத்து மழைக்கும் கூட….

சீறுகின்ற காளை… அதை அடக்குகின்ற வேளை…

தமிழர்களை மகிழ்விக்கக் கூடிய பண்டிகைகளில் இன்றியமையாதவை உழவர் திருநாளும், சித்திரைத் திருநாளும். ஆண்டில் ஒரு நாள் கொண்டாடக் கூடிய விடயம் பண்டிகை என நம் அனைவருக்கும் தெரியும். மாதம் முழுவதும் கொண்டாடப்படும் விடயம் என்னவென்று தெரியுமா…?ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு தான் அது. தைத் திங்கள் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு முறைகளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டு வேண்டுமா வேண்டாமா என்பதை இறுதியில் அலசுவோம்.

ஜல்லிக்கட்டு – பெயர்க் காரணம் :

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, “சல்லி காசு” எனப்படும் நாணயங்கள் உபயோகத்தில் இருந்தன. இந்த நாணயங்களை காளையின் கொம்பில், ஒரு துணியில் போட்டு கட்டி விடுவார்கள். இதைத் தான் “சல்லி கட்டு” என்றழைத்தனர். இந்த சல்லி கட்டு போட்டியின் முடிவில் வெல்லும் வீரருக்குச் சொந்தமாகும். ” சல்லி கட்டு” என்பதே மருவி பின்னாளில் ” ஜல்லிக்கட்டு” என்றானது.

தோற்றம் :

சிலம்பில் ஏறு தழுவுதல் பற்றிய குறிப்புகள் காணக் கிடைப்பதால், இவ்வீர விளையாட்டு இரண்டாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னரே தோன்றியிருக்கலாம் என்பது நம் கருத்து. பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில், அதாவது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஜல்லிக்கட்டு இருந்து வந்திருக்கிறது. பாண்டியர்களின் நாள்காட்டியில் இந்த விழா பற்றிய குறிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏறு தழுவுதலை தேசிய விளையாட்டாகக் கொண்ட ஸ்பெயின் நாட்டில் கூட 15ஆம் நூற்றாண்டிலிருந்துதான் “Bull Bitting” என்ற பெயரால் குறிக்கப்பட்டு இவ்விழா தொடர்ந்து நடத்தப்படுகிறது என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு – வகைகள் :

ஜல்லிகட்டில் இரண்டு வகைகள்  உள்ளன.  வாடிவாசல், வெளிவிரட்டு என்பன அவ்விரண்டு வகைகள். முன்னதில் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக திறந்துவிடப்படுகின்றன. பின்னது வெளிவிரட்டு எனப்படும் திறந்தவெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படுவது. பின்னதில் மாடு எந்தப் பக்கம் இருந்து வரும், யாரைத் தூக்கும் என்று தெரியாது. அந்த இடம் ஒரு யுத்தகளத்தை ஒத்திருக்கும்.

சிறுவயல், பலவான்குடி, திருப்பத்தூர், வேந்தன்பட்டி, ஆத்தங்குடி, வெளுவூர் என்று மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டுகள் வெளிவிரட்டு வகையைச் சேர்ந்தவை.

ஜல்லிக்கட்டு  – என்ன? எப்படி? :

இந்த ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார்படுத்துவதே ஒரு தனிக்கலை எனலாம். இந்தக் காளைகள் எந்த வேலையும் செய்வதில்லை. இவற்றிற்கு பச்சரிசி மாவும், நவதானியங்களும் உண்ணக் கொடுக்கப்படுகின்றன. மேலும், இந்தக் காளைகள் சற்றேறக் குறைய வளர்ப்பவரின் குணத்தைக் கொண்டிருக்கும். இந்த ஜல்லிக்கட்டுக் காளைகள் விளையாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில் சாதுவாகவே இருக்கின்றன. அதாவது, இவற்றிற்கு இது விளையாட்டு என்பது தெரிந்தே இருக்கிறது.

மேலும், விளையாட்டினூடே  மாடு நுரை தள்ளிவிட்டால் உடனே விளையாட்டை நிறுத்தும்படியாக அறிவிப்பு வந்துவிடுகிறது. அது போல அந்த மாடுகளைப் பிடிக்க முயற்சிக்கின்றவர்கள்  பரிசுப்பணத்தின் காரணமாக போட்டியில் கலந்து கொள்வதில்லை. அது தரும் சாகச உணர்வையே பெரிதாக நினைக்கிறார்கள்.

இலக்கியச்சான்றுகள் :
                                                      கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
                                                      புல்லாளே,ஆயமகள்’ (கலி.முல்லை.103 63-64)

அதாவது, ஏறு தழுவும் ஆண்களை பண்டைக் காலப் பெண்டிர் விரும்பி மணந்தனராம். ஆயர்குலப் பெண்டிர் தெருவில் பால் மற்றும் பால் பொருட்களினை விற்கும் பணியினை அந்நாளில் மேற்கொண்டிருந்தனர். அவ்வாறு தெருவில் அப்பெண் நடந்து செல்லும்போது, இவளின் கணவன் ஏறுதழுவிய வீரன் என அறிந்து மற்ற ஆண்களெல்லாம் அப்பெண்ணிடம் மரியாதையுடனே நடந்துகொள்வராம். அந்நாட்களில் திருமணம் முடிப்பதற்கு ஒரு ஆடவன் ஏறு தழுவியிருக்க வேண்டுமென்பது முக்கியத் தகுதியாகும்.  இவ்வாறாக முல்லைக் கலி எடுத்தியம்புகிறது.

இந்த ஏறுதழுவுதல் முல்லை நில மக்களால் மட்டுமே போற்றப்பட்ட விளையாட்டு என விவாதம் வைப்பவர்கள் சிலர்.  அப்படிப்பட்டவர்கள் கீழ்க்கண்ட செய்யுளைப் படித்தால் உண்மை நிலையறியலாம்.

‘இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை’ (மலை.330-335)

- மலைபடுகடாம்.

குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர் என்பதே இச்செய்யுளின் பொருள்.

இவ்வாறே சிலம்பும்,

‘மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக்
முல்லையம் பூங்குழல் தான்’ (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8)

வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சுட்டுகிறது.

இன்றைய நிலை :

இன்றும் ஜல்லிகட்டு நடந்தக்கூடாதென்று நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. வாதபிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. ஜீவகாருண்ய நிறுவனங்கள் போராடுகின்றன. ஆனால் இந்த விளையாட்டின் பின் மனிதர்க்கு உள்ள மனப்போக்கும், மாடுகளைச் சண்டைகளுக்குத் தயார் படுத்தும் விதமும், அதன் இலக்கியத் தொன்மையும் இது வெறும் வெறியூட்டும் விளையாட்டில்லை என்றே உணர வைத்துள்ளது. அதே நேரம், பணத்திற்காக வெளி நாட்டினர் முன்பாக காளைச் சண்டைகளை நம்மவர்கள் நடத்துவதையும் ஏற்பதற்கில்லை.

ஸ்பெயினில் இன்றும் காளைச் சண்டைகள் நடக்கின்றன.  குதிரை பந்தய ரேஸ் உலகெங்கும் நடந்தவாறே தான் உள்ளது. நாய்களைப் பழக்கி சண்டையிடுவது அலாஸ்காவில் காணப்படுகிறது. இவை முறைப்படுத்தபட்டிருக்கின்றன. மட்டுமன்றி மிருகங்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்த அக்கறைகள் முறையாக மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் படுகின்றன. ஆனால் நம்மிடையே அதற்கான முயற்சிகள் மிக மிகக் குறைவே. எல்லா வீரக்கலைகளும் போலவே தான் ஜல்லிகட்டும். அதில் மாடுகள் கொல்லப்படுவதில்லை.

என்ன செய்யலாம் ? :

நடத்தப்படும் வீர விளையாட்டு ஆறறிவு கொண்ட காளையோடல்லாமல்  ஐந்தறிவு கொண்ட காளையோடே என்றறிந்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு இவ்விளையாட்டை அனுமதிக்கலாம்.  காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும்,சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும்,மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதலை மறக்காமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் கவனம்செலுத்த வேண்டும்.

வாழ்க்கைப் பந்தயத்தில்…

கலங்கரை விளக்கம் தேடி
கடலில் தத்தளிக்கும்
மாலுமியற்ற கப்பலாய்…
 
பறந்து கொண்டிருக்கும்
பறவையினுடைய
இலக்காய்…
 
கவிதையென்பதை
அறிந்திராத வெற்றுக்
காகிதமாய்…
 
என்னவளைத் தேடி
அலைந்திருந்தேன்…
அவள் என்னருகிருப்பதை
அறியாமலேயே…
 
 
தோழியாய் நின்று
வாழ்க்கைப் பாடம்
கற்பித்தாள்…
 
தனயனாய்ப்
பாவித்து என்னைத்
தேற்றினாள்…
 
காதலியாய்  நின்று
என்னில் கவிதைகள்
புகுத்தினாள்…
 
 மனிதனாய்
எனை மாற்ற
மனைவியானாள்…
 
இப்படியாய்…
 
“ஓடிப் போனவள்”  என
ஊர் சொன்ன என்
உறவுக்காரி….
 
இன்று…
 
 
ஊராரைத் தோற்கடித்து என்னோடு
வென்று கொண்டிருக்கிறாள் – வாழ்க்கை
வைத்த ஓட்டப் பந்தயத்தில்…!
 
 

இ(வி)லக்கியக் காதல்…

இலக்கியக் காதல்…

 

பதினாறில் பூத்துக் குலுங்கி

இருபதில் மணம் முடித்து

நாற்பதில் பிள்ளைகள் பெற்று

அறுபதில் துணைவியிடம் ஆசையாய்ப் பேசினால்கூட

சபலம் என ஒதுக்கி வைக்கும் தன்மையது…

 

இதோ இலக்கியத்திற்கும் எனக்குமான முரண்பாடு…

 

இருபதில் வருவது இனக்கவர்ச்சி…

நாற்பதில் வருவது காதல்…

அறுபதில் வருவது கனிந்த காதல்…!

 

இந்தக் கனிந்த காதலை

இலக்கியம் சபலமென விலக்கிவிடுகிறது…!

 

 

அலுப்புத்தட்ட வாழ்ந்தும் சலிக்காமல்

அன்பே இது நொடி காறும் உனை நேசிக்கிறேன்

எனும் அன்பனைப் பார்த்து

ஒரு துளிக் கண்ணீர் உதிர்ப்பாளே கிழவி

அங்கே வாழ்கிறது உண்மைக் காதல்…!

 

முத்தத்தில் தொடங்கி

சுதந்திரம் வரை

மொத்தமும் கேட்கிறது

இளமைக் காதல்…!

 

மொத்தமும் கேட்கலாம்

எனினும் ஒரு முத்தமாவது

கொடு எனக் கேட்கிறது

கனிந்த காதல்…!

 

இளமையில் செத்துப் போகும்

இலக்கியம் விளக்கிய காதலினும்

முதுமையிலும் வாழும்  

இலக்கியம் விலக்கிய எம் காதல்

முற்போக்கானது…!